லடாக்கை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் ராஜ்நாத் சிங் ஆய்வு அமர்நாத் கோவிலிலும் வழிபட்டார்


லடாக்கை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் ராஜ்நாத் சிங் ஆய்வு அமர்நாத் கோவிலிலும் வழிபட்டார்
x
தினத்தந்தி 19 July 2020 5:50 AM IST (Updated: 19 July 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

லடாக்கை தொடர்ந்து காஷ்மீர் எல்லையிலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று வழிபாடு நடத்தினார். முன்னதாக அவர் அமர்நாத் குகை கோவிலில் வழிபாடு நடத்தினார்.

ஸ்ரீநகர்,

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் 2 நாள் சுற்றுப்பயணம் செய்தார். இதில் முதற்கட்டமாக லடாக் சென்ற அவர், அங்கு இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் நடந்த கிழக்கு லடாக் எல்லையில் ஆய்வு நடத்தினார். அங்கே இந்திய படைகளின் தயார் நிலை, எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

லடாக் சுற்றுப்பயணத்தை முடித்து காஷ்மீர் திரும்பிய ராஜ்நாத் சிங், அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தய அவர், பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், எலலையில் பாகிஸ்தான் அத்துமீறினால் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பின்னர் நேற்று அவர் குப்வாரா மாவட்டத்தின் கெரன் செக்டார் பகுதிக்கு நேரில் சென்று எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக அங்குள்ள வடமலை ராணுவ நிலைக்கு சென்ற அவர், எல்லை நெடுகிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து ராணுவ மூத்த அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக பின்னர் அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே சென்று முன்னணி நிலைகளை ஆய்வு செய்தேன். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களிடம் கலந்துரையாடினேன். ஒவ்வொரு சூழலிலும் நமது நாட்டை காக்கும் இந்த வீரம் மற்றும் துணிச்சல் மிகுந்த வீரர்களை பார்த்து பெருமையடைகிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக நேற்று காலையில் ராணுவ மந்திரி அமர்நாத் குகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமர்நாத் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர், சுமார் 30 நிமிடம் கோவிலில் செலவிட்டார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘காஷ்மீரில் உள்ள ஸ்ரீ அமர்நாத்ஜி புனித குகையில் பிரார்த்தனை செய்தபின் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குடன் முப்படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உடன் சென்றனர்.


Next Story