டெல்லியில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: ஒருவர் பலி


டெல்லியில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து:  ஒருவர் பலி
x
தினத்தந்தி 19 July 2020 5:44 AM GMT (Updated: 19 July 2020 5:44 AM GMT)

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டதில் ஒருவர் பலியானார்.

புதுடெல்லி,

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.  டெல்லி நொய்டா பகுதி, தீன் மூர்த்தி சாலை, மின்டோ சாலை பகுதி, கீர்த்தி நகர் பகுதி, திலக் பாலம், மின்டோ பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.

சில இடங்களில் வெள்ள நீரானது தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில், டெல்லி மின்டோ பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர்.  இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்றனர்.  அதற்குள், பேருந்து நீருக்குள் முக்கால்வாசிக்கும் மேல் மூழ்கியிருந்தது.  பின்னர் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.  எனினும், பேருந்தின் அருகே உடல் ஒன்று மீட்கப்பட்டது.

இதுபற்றி ரெயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றும் ராம்நிவாஸ் மீனா என்பவர் கூறும்பொழுது, ரெயில்வே டிராக்கில் பணியில் இருந்தேன்.  பாலத்திற்கு கீழே வெள்ளத்தில் சிக்கி பேருந்து நின்று கொண்டு இருந்தது.  பேருந்தின் முன் உடல் ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.  இதனால், நான் கீழே இறங்கி சென்று, வெள்ள நீரில் நீந்தி சென்று உடலை மீட்டேன் என்று கூறியுள்ளார்.

Next Story