ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி மத்திய மந்திரி ஷெகாவத் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்


ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி மத்திய மந்திரி ஷெகாவத் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 July 2020 4:45 AM IST (Updated: 20 July 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி செய்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதைப்போல சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு எதிராக சபாநாயகர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ராஜஸ்தான் ஐகோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது.

இதற்கிடையே மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.வான பன்வாரிலால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோருடன் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாக கூறப்படும் ஆடியோ டேப் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. இது தொடர்பாக மாநில போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவில் புகாரும் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சஞ்சய் ஜெயினை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த களேபரங்களால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயன்ற மத்திய மந்திரி ஷெகாவத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயன்றது தொடர்பாக மாநில போலீசின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று ஷெகாவத் கூறியுள்ளார். அப்படியென்றால் ஏன் குரல் பரிசோதனைக்கு அவர் அஞ்சுகிறார்?

அவர் மத்திய மந்திரியாக தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை எவ்வித தடையும் இன்றி தொடரும். இந்த விசாரணையை தடுப்பதற்காக மத்திய அரசு சி.பி.ஐ. பெயரில் மிரட்டுகிறது. ராஜஸ்தானின் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு டெல்லி, அரியானா போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.

ராஜஸ்தான் அரசியலில் நிலவி வரும் இத்தகைய பரபரப்பான சூழலில் மாநில சட்டசபை இந்த வாரம் கூடும் என தெரிகிறது. விரிவான தொடராக நடத்துவது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை நேற்று முன்தினம் முதல்-மந்திரி கெலாட் சந்தித்து பேசினார்.

எனினும் இந்த கூட்டத்தொடரில் அரசு நம்பிக்கை வாக்கு கோருமா? என்ற கேள்விக்கு அஜய் மக்கான் பதிலளிக்கையில், அது குறித்து முதல்-மந்திரியும், மாநில அரசும் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

200 உறுப்பினர் சட்டசபையில் 107 உறுப்பினர்களை காங்கிரஸ் கொண்டிருந்த நிலையில், தற்போது சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் 18 பேரும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் தகுதி நீக்க அபாயத்தில் உள்ளனர்.

அதேநேரம் 13 சுயேச்சைகளில் 10 பேர் கெலாட் அரசை ஆதரிக்கின்றனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் அரசை ஆதரிக்கும் சூழல் உள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

2 உறுப்பினர்களை கொண்ட பாரதிய பழங்குடி கட்சி அதிகாரப்பூர்வமாக கெலாட் அரசுக்கு ஆதரவை அளித்துள்ளது. பழங்குடி பகுதி வளர்ச்சிக்கு உறுதியளித்ததால் கெலாட் அரசை ஆதரிப்பதாக கட்சியின் தலைவர் மகேஷ்பாய் வசவா தெரிவித்தார். தற்போதைய சூழலில் தாங்கள் கிங்மேக்கராக திகழ்வதாகவும் அவர் கூறினார்.

Next Story