தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண பாக்கி வழக்கு விசாரணை முடிந்தது சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண பாக்கி வழக்கு விசாரணை முடிந்தது சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 July 2020 3:00 AM IST (Updated: 21 July 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண பாக்கி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடைந்தது.

புதுடெல்லி,

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண பாக்கி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு (தொலைத்தொடர்பு துறைக்கு) உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்று செயல்படுத்தவில்லை.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் மத்திய தொலைத் தொடர்பு துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள், “தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை எவ்வாறு வசூலிக்கப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் தரப்பில் ஆஜரான வக்கீல், “மத்திய தொலைத்தொடர்பு துறை கணக்கிட்டுள்ள பாக்கி தொகை குறித்து மீண்டும் நாங்கள் சரி பார்க்க வேண்டி உள்ளது” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

செலுத்த வேண்டிய பாக்கி தொகை குறித்து யாரும் உடன்படாமல்தான் இருப்பார்கள். இந்த நிலுவைத் தொகையை எத்தனை தவணைகளில் கட்டப்போகிறீர்கள் என்பது பற்றி கூறுங்கள். இந்த நாட்டில் என்ன நடக்கிறது? இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சரிப்படுத்தப்பட்ட மொத்த வருவாய் என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தை ஏற்கனவே கோர்ட்டு அளித்து இருக்கிறது. இதன் அடிப்படையில் மத்திய தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே கணக்கிட்டு இருக்கிறது. எனவே இதன் மீதான நிலுவைத் தொகை தொடர்பான வாதங்களை நாங்கள் ஒரு வினாடி கூட கேட்க தயாராக இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

விசாரணை நேற்றுடன் முடிவடைந்ததால், கட்டண பாக்கி தொகையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய காலக்கெடு குறித்த தங்கள் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அத்துடன், திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கையை விசாரிக்க அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

Next Story