நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனினும், கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தவிர்த்து, நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிவாரண முகாம்களை தஞ்சமடைந்து உள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து சிக்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். இதேபோன்று அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பீகாரில் 7.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கனமழையால் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் மற்றும் வடமாநிலங்களில் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு 6 மாதங்களுக்கு மேல் காலியாகவுள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை வருகிற செப்டம்பர் 7ந்தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்தி வைப்பது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை நேற்று வெளியிட்டது.
இதன்படி, பீகார் (வால்மீகி நகர்), அசாம் (சிப்சாகர்), தமிழகம் (திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம்), மத்திய பிரதேசம் (அகார்), உத்தர பிரதேசம் (புலந்தர் மற்றும் துண்ட்லா), கேரளா (சவரா) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய தேர்தல் ஆணைய வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட நிலைமை சீரடையவில்லை. இந்நிலையில், தேர்தல் நடத்தினால் அது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரிய ஆபத்து ஏற்படுத்தி விடும்.
இதுதவிர, மாவட்ட நிர்வாகம் வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கும். அதனுடன், கூடுதல் பணியாக தேர்தல் பணிகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவது, தேர்தல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்று விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story