புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை புறக்கணிப்பு; அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு


புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை புறக்கணிப்பு; அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 24 July 2020 5:17 PM IST (Updated: 24 July 2020 5:17 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகியவை கடந்த 20ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அன்றைய தினம் கவர்னர் கிரண்பெடி உரையை தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் உரையை படிக்க அவகாசம் கேட்டு வேறு தேதியில் சட்டசபையை நடத்துமாறு கிரண்பெடி கடிதம் அனுப்பினார். இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி உரையாற்ற சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தார். திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  புதுச்சேரி அரசியல் வரலாற்றில் எந்த காலத்திலும் நிகழாத சம்பவம் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது.  இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கவர்னர் உரையின்றி தொடங்கியது. முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

இந்நிலையில் அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மற்றும் துறைவாரியான மானிய கோரிக்கைகளை சட்டசபையில் முன்னிலைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று மாலை கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.  இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், முதியோர் பென்ஷன் மற்றும் நலத்திட்டங்கள் போன்றவை வழக்கம்போல் கிடைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இதனை தொடர்ந்து சபாநாயகர் சிவகொழுந்து, துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் கிரண்​பெடியை  பூங்கொத்து கொடுத்து சட்டசபையில் இன்று வரவேற்றனர். இதனையடுத்து கவர்னர் கிரண்பெடி, அவை நடவடிக்கையில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

கவர்னர் உரையை வாசிக்க தொடங்கிய உடன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லஷ்மி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story