பெங்களூரு சிறையில் சசிகலா, தனியாக சமைத்து சாப்பிட அனுமதியா? - அதிகாரிகள் மறுப்பு


பெங்களூரு சிறையில் சசிகலா, தனியாக சமைத்து சாப்பிட அனுமதியா? - அதிகாரிகள் மறுப்பு
x
தினத்தந்தி 24 July 2020 10:00 PM GMT (Updated: 24 July 2020 9:42 PM GMT)

பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு தனியாக சமைத்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்தனர்.

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள், சிறை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சசிகலா, இளவரசி ஆகியோர் தனியாக சமைத்து சாப்பிடுவதாகதகவல் வெளியானது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் சசிகலாவுக்கு சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, பரபரப்பு குற்றச்சாட்டை உயர் அதிகாரி மீது தெரிவித்தார். அது தொடர்பாகவும் சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க அப்போது உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சிறையில் சசிகலா தனியாக சமைத்து சாப்பிடுவதாக வெளியான தகவல் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதுபோல் தனியாக சமைத்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

Next Story