இந்தியா திரும்பும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமை: மத்திய அரசு அறிவிப்பு
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் சொந்த செலவில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய திட்டம் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் சொந்த செலவில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கால் சர்வதேச அளவில் விமான போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. ஆனால் இந்த விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. எனவே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் தனிப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விமானங்களை இயக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.
அதன்படி பிரான்சில் இருந்து கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 28 விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதைப்போல அமெரிக்காவின் யுனைடெட் விமான நிறுவனம் 18 விமானங்களை வருகிற 31-ந்தேதி வரை இந்திய நகரங்களுக்கு இயக்குகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுடனும் விரைவில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் இந்தியா வரும் பயணிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் சுகாதாரம், விமான போக்குவரத்து, குடியேற்றத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருகட்ட உடல்நல பரிசோதனை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வந்திறங்கும் விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதைப்போல அவர்கள் முதலில் வந்திறங்கும் நகரத்திலேயே சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு (நிறுவன தனிமைப்படுத்தல்) உட்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு வேண்டுவோர் விமான நிலையங்களில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து வழங்கி, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். டெல்லியை பொறுத்தவரை கர்ப்பிணிகள், குடும்பத்தில் மரணம், தீவிர நோய்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருவோருக்கு மட்டுமே நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story