ராஜஸ்தான் அரசியல் சூழலில் தேவைப்பட்டால் பிரதமரின் இல்லம் முன்பு சென்று போராடுவேன் - அசோக் கெலாட் ஆவேசம்


ராஜஸ்தான் அரசியல் சூழலில் தேவைப்பட்டால் பிரதமரின் இல்லம் முன்பு சென்று போராடுவேன் -  அசோக் கெலாட் ஆவேசம்
x
தினத்தந்தி 25 July 2020 5:05 PM IST (Updated: 25 July 2020 5:05 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் அரசியல் சூழலில் தேவைப்பட்டால் பிரதமரின் இல்லம் முன்பு சென்று போராடுவேன் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் சட்டபேரவையை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கைக்கு இன்னும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா செவி சாய்க்கவில்லை. 

இந்த நிலையில்,  இன்று  காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி அசோக் கெலாட், “  ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் சதியை ஒருபோதும் வெற்றி பெற விட மாட்டோம். தேவைப்பட்டால் ஜனாதிபதி மாளிகை செல்லவும் நான் தயாராக உள்ளேன். தேவைப்பட்டால் பிரதமரின் இல்லம் முன்பு சென்று போராடவும் தயங்க மாட்டேன்” என்றார்.

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏன்?

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இருவருக்கு இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர் கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்-மந்திரி பதவியும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கியது.

எனினும் இருவருக்கு இடையிலான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்தது. இது சமீபத்தில் விரிசலாக மாறியது. முதல்-மந்திரி கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கினார். மேலும் அசோக் கெலாட் தலைமையில் நடந்த காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தையும் அவரும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சச்சின் பைலட் வகித்து வந்த துணை முதல்-மந்திரி பதவி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அத்துடன் கட்சியின் கொறடா உத்தரவை மீறி சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்காததால், அவருக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். அங்கு தற்போது இருக்கும் நிலையே பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரிய சச்சின் பைலட்டின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கட்சித்தாவல் தடை சட்டத்தின் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யும் வரை தீர்ப்பை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இதற்கு மத்தியில் மாநில காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜனதாவும் சதி செய்வதாக காங்கிரஸ் புகார் கூறி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான கஜேந்திர சிங் ஷெகாவத், அதிருப்தி எம்.எல்.ஏ. ஒருவருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ டேப் ஒன்றை அந்த கட்சி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதற்காக முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சச்சின் பைலட்டும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அரியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மாநில சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் திட்டமிட்டு உள்ளார். எனவே சட்டசபையை கூட்டுமாறு கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நேற்று முன்தினமும் அவர் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஆனால் சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பிக்கவில்லை. இதனால் முதல்-மந்திரி அசோக் கெலாட் தரப்பினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். எனவே அவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து சட்டசபை கூட்டுமாறு வலியுறுத்த முடிவு செய்தனர்.

அதன்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து 4 பஸ்களில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட், கவர்னரை சந்தித்து சட்டசபையை கூட்டுமாறு மீண்டும் வலியுறுத்தினார்.

அப்போது கவர்னர் மாளிகையில் கூடி இருந்த எம்.எல்.ஏ.க்கள், திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை கூடுவதற்கான தேதியை அறிவிக்கும் வரை அங்கிருந்து செல்லமாட்டோம் என கூறிய அவர்கள், ‘மதிப்புக்குரிய கவர்னரே சட்டசபையை காப்பாற்றுங்கள்’ என கோஷமிட்டவாறே ‘தர்ணா‘வில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், ‘சட்டசபையை கூட்ட வேண்டாம் என்று யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அது குறித்த விளக்கம் அளித்தால், சட்டசபையை கூட்டுவது குறித்து பரிசீலிக்கலாம்’ என்று தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், போராட்டத்தை கைவிட்டு முதல்-மந்திரியுடன் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றனர். இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் மாளிகையில் காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்தியதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மாநில எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், ‘கவர்னர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிடுவார்கள் என முதல்-மந்திரி கூறுகிறார். எனவே மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) மத்திய அரசு களமிறக்க வேண்டும். ராஜஸ்தான் போலீசாரை நம்பக்கூடாது’ என்று வலியுறுத்தினார்.

இதைப்போல, ‘கவர்னர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிடுவார்கள் என்ற அசோக் கெலாட்டின் கருத்து துரதிர்ஷ்டவசமானது’ என கூறிய மாநில பா.ஜனதா தலைவர் சதீஷ் பூனியா, இதன் மூலம் அவர் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைத்து இருப்பதாகவும், உள்துறையை கவனித்து வரும் அவரே சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் ஆளும் முதல்-மந்திரி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகையில் திடீரென்று முற்றுகை போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் உருவாக்கி இருக்கிறது.இனி வரும் நாட்களில் ராஜஸ்தான் அரசியலில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story