இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 4.20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை


இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 4.20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
x
தினத்தந்தி 26 July 2020 4:15 AM IST (Updated: 26 July 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனாவை கண்டறிய சாதனை அளவாக ஒரே நாளில் 4.20 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்து தினமும்3½ லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டுமே நாடு முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 898 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இது இதுவரை இல்லாத சாதனை அளவு ஆகும்.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை விகிதாசாரமும் உயர்ந்து வருகிறது. 10 லட்சம் பேருக்கு 11 ஆயிரத்து 485 என்ற அளவுக்கு இது அதிகரித்து உள்ளது.

இதுவரை இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்து 49 ஆயிரத்து 68 ஆகும்.

இங்கு பரிசோதனைகள் பெருகுவதில், தொடர்ந்து அதிகரித்து வரும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்தஜனவரியில் நாட்டில் ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது நாட்டில் 1,301 பரிசோதனைக்கூடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் அரசு தரப்பில் 902 பரிசோதனைக்கூடங்களும், தனியார் துறையில் 399 பரிசோதனைக்கூடங்களும் இயங்கி வருகின்றன.

அதே நேரத்தில் உலகளவில் கொரோனாவில் குறைந்த அளவு இறப்புகளை சந்தித்து வருகிற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தொடர்கிறது.

இந்தியாவில் நேற்று நிலவரப்படி இறப்புவீதம் 2.35 சதவீதம் ஆகும்.

முழுமையான, தரமான பராமரிப்பு அணுகுமுறையின் அடிப்படையில்,பயனுள்ள தரமான மருத்துவ சிகிச்சை அளித்து வருவதால் இறப்புவீதம் குறைந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 32 ஆயிரத்து 223 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் இதுவரை 8 லட்சத்து 49 ஆயிரத்து 431 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.

குணம் அடைவோர் விகிதாசாரம் 63.54 சதவீதமாக உள்ளது.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 360 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story