கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் 4-வது வாரமாக இன்று முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் 4-வது வாரமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலியாவோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
அதாவது மாநிலத்தில் இதுவரை வைரசுக்கு 1,732 பேர் (நேற்று முன்தினம் வரை) பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவை தடுக்கும் பொருட்டு கர்நாடகத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் இந்த முழு ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கடந்த 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஒரு வாரம் பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 4-வது வாரமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஞாயிறு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. வழக்கமான இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. அத்துடன் இந்த ஞாயிறு ஊரடங்கும் சேர்ந்துள்ளது. இது நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை அமலில் இருக்கும். ஆகமொத்தம் 32 மணி நேரம் தொடர்ச்சியாக ஊரடங்கு கர்நாடகத்தில் அமலுக்கு வந்துள்ளது.
இதையொட்டி கர்நாடகத்தில் இன்று பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடாது. வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. வணிக வளாகங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பால் விற்பனையகங்கள், காய்கறி கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள் எப்போதும் போல் திறந்திருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பெங்களூருவில் பெரும்பாலான சாலைகள் மற்றும் பாலங்களை இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் மூடியுள்ளனர். பெங்களூரு நகரம் முழுவதும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story