3 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு: திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆலோசனை!


3 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு: திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆலோசனை!
x
தினத்தந்தி 27 July 2020 2:26 PM GMT (Updated: 27 July 2020 2:32 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்றோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 125 நாட்கள் ஆகின்றன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  மே 31 ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல்  படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2 ஆம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.  அதன்பிறகு  ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் திரையரங்குகள், கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஆலோசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா அரங்குகள் 25-30 சதவிகித மக்கள் எண்ணிக்கையில் செயல்பட அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.  

உடற்பயிற்சி கூடங்கள்  கடும் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில்களை இயக்க டெல்லி மாநில அரசு அனுமதியை கோரியுள்ளது. ஆனால், மத்திய அரசு இது குறித்து எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.    மத்திய அரசு  தியேட்டர், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி கொடுத்தால் கூட  மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ள  முழு அனுமதி அளிக்கப்படும் என்றே தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கொரோனா தொற்று தற்போதுதான் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.35 லட்சமாக உயர்ந்துள்ளது.  இதனால், மிகவும் கவனமாக மத்திய அரசு தளர்வுகளை அறிவிக்கும் என்றே தெரிகிறது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் துவக்கத்தில் இருந்ததை போலவே இன்னமும் அச்சுறுத்தும் வகையிலே இருப்பதாக பேசியிருந்தார்.


Next Story