மும்பையில் 3 மாதங்களுக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையில் பதிவான கொரோனா தொற்று


மும்பையில் 3 மாதங்களுக்குப் பிறகு  குறைந்த எண்ணிக்கையில் பதிவான கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 July 2020 11:04 AM GMT (Updated: 28 July 2020 11:04 AM GMT)

மும்பையில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது மராட்டியம் தான். மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. மராட்டிய தலைநகரும் நாட்டின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் காணப்பட்டது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  தீவிர நடவடிக்கைகளை மராட்டிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக மும்பையில் தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.  மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டதட்ட  9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்த நிலையில், 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதேபோல், நேற்றைய தினம் 8,776 பேருக்கு சோதனை செய்த நிலையில், 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியானது. இது கடந்த 100 நாட்களில் இல்லாத குறைந்த அளவிலான பாதிப்பு எண்ணிக்கையாகும்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 1,033 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மும்பை மாநகரில்  பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 68 நாட்கள் வரை ஆகிறது. அதேபோல், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் 73 சதவீதமாக உள்ளது. ஜூலை 20 முதல் 26ம் தேதி வரை மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.03 சதவீதம் கூடியுள்ளது.

மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரேஎ தனது டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார். ஆதித்ய தாக்கரே வெளியிட்ட பதிவில், “ மும்பையில் அதிக பட்ச பரிசோதனைகள் மேற்கொண்ட போதிலும் 700 பேருக்கே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது.  எனினும், மக்கள் பாதுகாப்பு விதிகளை கைவிட்டு விடக்கூடாது. மாஸ்க் அணிவதை தொடருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story