ராஜஸ்தானில் நீடிக்கும் அரசியல் நெருக்கடி: ஆளுநருடன் முதல்வர், சபாநாயகர் அடுத்தடுத்து சந்திப்பு


ராஜஸ்தானில் நீடிக்கும் அரசியல் நெருக்கடி: ஆளுநருடன் முதல்வர், சபாநாயகர் அடுத்தடுத்து சந்திப்பு
x
தினத்தந்தி 29 July 2020 2:24 PM GMT (Updated: 29 July 2020 2:24 PM GMT)

இன்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அசோக் கெலாட்டின் பரிந்துரைக்கு ஆளுநர் இன்னும் இசைவு கொடுக்கவில்லை.

இந்த நிலையில், இன்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி,  ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் இன்று மூன்றாவது முறையாக கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநர்  மாளிகை சென்று சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையை கூட்டுவது தொடர்பாக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர், சபாநாயகர் என அடுத்தடுத்த சந்திப்புகளால் ராஜஸ்தான் அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது. 

Next Story