ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது


ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது
x
தினத்தந்தி 30 July 2020 1:09 AM GMT (Updated: 30 July 2020 1:09 AM GMT)

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது.

 ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் ஐகோர்ட்  தடை விதித்தது.

இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். 

இந்த நிலையில், நேற்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி,  கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கவர்னருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் நேற்று மூன்றாவது முறையாக கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநர்  மாளிகை சென்று சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையை கூட்டுவது தொடர்பாக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட்டப்படும் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளிவந்து உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆகஸ்ட் 14 முதல் கூட்டும் அமைச்சரவை அனுப்பிய திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்றகெலாட்டின் முந்தைய நிலைப்பாட்டின் முன்னேற்றமா இந்த நடவடிக்கை காணப்படுகிறது. 

Next Story