தேசிய செய்திகள்

நடிகரிடம் டிராக்டர் பெற்ற விவசாயி உண்மையில் ஏழையா? - உண்மை என்ன..? + "||" + The farmer who got the tractor from the actor Really poor? - What is the truth ..?

நடிகரிடம் டிராக்டர் பெற்ற விவசாயி உண்மையில் ஏழையா? - உண்மை என்ன..?

நடிகரிடம் டிராக்டர் பெற்ற விவசாயி உண்மையில் ஏழையா? - உண்மை என்ன..?
நடிகரிடம் டிராக்டர் பெற்ற ஆந்திர விவசாயி உண்மையில் ஏழையா என்ற விமர்சனம் எழுந்து உள்ளது.
திருப்பதி, 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். விவசாயியான அவர் மதனப்பள்ளியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர், தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர்களின் 2 மகள்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். மனைவி குடும்ப தலைவியாக உள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் டீக்கடை மூடப்பட்டுள்ளது. அவர், ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது நிலத்தில் விளைந்த தக்காளியை விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்தார். எனினும் அவர், மதனப்பள்ளி அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.

நிலத்தை டிராக்டரால் உழுது விவசாய பணிகளை மேற்கொள்ள அவரிடம் போதிய பணம் இல்லை எனக்கூறப்படுகிறது. நிலத்தை உழ அவரிடம் மாடுகள் இல்லாததால், அதற்கு பதிலாகத் தன்னுடைய இரு மகள்களை மாடுகள் போல் பயன்படுத்தி ஏர் உழுது நிலத்தைப் பண்படுத்தி வேர்க்கடலை விதையை விதைத்தார்.

சொந்த நிலத்தில் அவரும், மனைவி மற்றும் 2 மகள்களை கொண்டு 4 பேராகச் சேர்ந்து வேர்க்கடலை விதை விதைத்தனர். அவர்களை பார்த்த கிராம மக்கள் அச்சரியம் அடைந்தனர். கல்லூரியில் படிக்கும் மகள்களை ஏரை இழுக்க செய்யலாமா? என அவரை கிராம மக்கள் கண்டித்தனர். ஆனால் அவர், தாய்க்கு சமமான நிலத்தை இதுபோல் உழுவது தவறு இல்லை, என அவர்களிடம் கூறி விட்டார்.

விவசாயி நாகேஸ்வரராவின் நிலையை உணர்ந்த திரைப்பட நடிகர் சோனுசூட் ஒரு டிராக்டரை அவர்களுக்கு இலவசமாக வழங்கினார். இதனால் விவசாயியும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது இந்த சம்பவம் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

ஆனால் ஆந்திர அரசு நாகேஷ்வர ராவ்வின் குடும்பம் மோசமான வறுமையில் இல்லை என்றும், அவர்களுக்கு தேவையான நலத்திட்டம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் நாகேஷ்வர ராவ்வின் குழந்தைகள் வேடிக்கைக்காக இதை செய்தனர் ஆனால் இது வைரல் ஆனதும், அவர்கள் உழுவதற்கு மாடுகளை வாங்க இயலாமல் அவ்வாறு செய்வதாக கூறப்பட்டது என்பது போன்ற செய்திகள் வந்தன.

நாகேஷ்வர ராவ்வின் பெற்றோர் அரசாங்கத்தால் கட்டப்பட்ட இந்திரம்மா இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். நாகேஷ்வர ராவ்வின் குடும்பம் மதனப்பள்ளியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் வருமானம் இல்லாமல் போகவே நாகேஷ்வர ராவ்வின் குடும்பம் அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

குழந்தைகளின் படிப்பிற்காக அந்த குடும்பம் அவர்களின் கிராமத்தை விட்டு மதனப்பள்ளிக்கு வந்தனர். நாகேஷ்வர ராவ் டீ கடை நடத்தி குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். அவர் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே விவசாயத்தை விட்டுவிட்டார் என செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் பாரத் குப்தா கூறும் போது

"அந்த குடும்பத்திற்கு இந்த வருடமும், கடந்த வருடமும் விவசாய முதலீட்டு உதவி திட்டமான 'ரிட்டு பந்து' திட்டம் மூலம் உதவிகளை வழங்கினோம். அவர்கள் டிராக்டர் வைத்து விவசாயம் செய்ய முடியாத அளவு ஏழைகள் அல்ல. அவர்கள் டிராக்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் டிராக்டர் வருவதற்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது," கூறினார்

இதுகுறித்து நாகேஷ்வர ராவ் கூறும் போது "ஆம். நான் ஒரு தலித். மனித உரிமைக்கான பணியாளர். லோக் சட்டா கட்சியின் சார்பாக 2009ஆம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டுள்ளேன். எனக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. 

கடந்த வருடம் விவசாய முதலீட்டு உதவி திட்டம் மூலம்  நாங்கள் பணம் பெற்றோம். ஆனால் எவ்வளவு பணம் என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நிலம் எனது தந்தைக்கு சொந்தமானது.

"எனது மகள்களிடம் விவசாயத்திற்கு பணம் இல்லை நாம் விவசாயம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் உதவி செய்து என்னை விவசாயம் செய்ய கட்டாயப்படுத்தினர். 
"நான் எனக்கு விவசாயம் தெரியாது எனக்கு உதவி செய்யுங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை…எனக்கு அரசு உதவி செய்யவில்லை என்று நான் கூறினேனா? என கேள்வி எழுப்பினார்.