அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி


அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 30 July 2020 9:29 AM GMT (Updated: 30 July 2020 9:29 AM GMT)

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவின் மகளும் உத்தரபிரதேச மாநிலத்தின் பொதுச்செயலருமான பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பு நீக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டெல்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது.

இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. ஆகவே பங்களாவை ஜூலை 31க்குள் காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை பிரியங்கா காந்தி காலி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியின் சுஜன் சிங் பூங்கா அருகில் உள்ள வீடு ஒன்று அவருக்கு பிடித்துள்ளது. தற்போது, அங்கு சில மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அது ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும். அதன் பின்னர் பிரியங்கா, அந்த வீட்டில் குடியேறுவார். அதுவரை  சிறிது காலம் அரியானா மாநிலம் குருகிராமில், செக்டார் 42 ல் டிஎல்எப் அராலியாவில் உள்ள வீட்டில் தங்கியிருப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story