நாட்டில் நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த திட்டம்; மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு


நாட்டில் நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த திட்டம்; மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 July 2020 6:06 PM GMT (Updated: 30 July 2020 6:06 PM GMT)

நாட்டில் நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி உள்ளது.  750க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்ததன் காரணமாக, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிகை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கடந்த ஏப்ரலில் நாள் ஒன்றுக்கு நாங்கள் 6 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை நடத்தி வந்தோம்.  ஆனால், இன்று நாளொன்றுக்கு 5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டு உள்ளது.  இதன்படி, நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும்.  அதற்கான பணிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என அவர் கூறினார்.

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 64 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  இது உலகளவில் ஒப்பிடும்பொழுது அதிகம்.  இதேபோன்று, நாட்டில் கொரோனா பாதிப்புகளால் இறப்பு விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story