கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடல்


கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடல்
x
தினத்தந்தி 31 July 2020 1:23 AM GMT (Updated: 31 July 2020 1:23 AM GMT)

கர்நாடகத்தில் 3-ம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 2-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை மூடப்படும். அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக கற்பித்தலுக்கு எந்த தடையும் இல்லை. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், மாநாட்டு அரங்கங்கள் போன்றவை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுகிறது.

வருகிற 5-ந் தேதி முதல் யோகா பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரெயில், சமூக, அரசியல், விளையாட்டு, கலாசார, மத விழாக்களுக்கு அனுமதி இல்லை. சுதந்திர தின நிகழ்ச்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மாநிலத்திற்குள்ளும், பிற மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதற்கு தனியாக அனுமதி பெற தேவை இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

ரெயில், விமான போக்குவரத்து போன்றவை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இயக்க அனுமதிக்கப்படும். இந்த வழிகாட்டுதல் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story