இந்தியாவில் கொரோனா பரவ அதிகம் அலட்சியமே காரணம் - ஆய்வில் தகவல்


இந்தியாவில் கொரோனா பரவ அதிகம் அலட்சியமே காரணம் - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 31 July 2020 8:35 AM GMT (Updated: 31 July 2020 8:35 AM GMT)

இந்தியாவில் அலட்சியத்தால் தான் 60 சதவீத கொரோனா தொற்று பரவுகிறது என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே நோய் பரவலுக்கான காரணங்களையும் ஆராய்ந்து சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறைகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் இளைஞர்கள், கொரோனாவை அலட்சியப்படுத்துவதன் காரணமாக சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ், உலகெங்கிலும் 1.7 கோடிக்கும் அதிகமான மக்களைக் பாதித்துள்ள தொற்றுநோய், முதியவர்களையும், 40 வயதுக்குமேல் உள்ளவர்களையும் அதிக அளவில் பாதித்து வருகிறது., இந்த நிலையில் தாமும் ஆபத்தில் உள்ளோம் என்பதை இளைஞர்கள் உணராமல் உள்ளனர் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் ஒரு பெரிய சவால், இந்த ஆபத்து குறித்து இளையவர்களை உணர வைப்பது தான்.

இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடுவதால் சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்பதற்கான சான்றுகள் இருப்பதாக தெரிவித்த அவர் இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

லட்சியம் பொறுப்பில்லாத, பயமில்லாத மக்களால்தான் கொரோனா வைரஸ் 60 சதவீதம் பரவுகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த ஆய்வானது பொதுமக்கள் பயன்படுத்தும் ஆப் மூலமாக கருத்துக்கள் கேட்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் இந்தியா முழுவதிலும் 300 மாவட்டங்களிலிருந்தும் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.இதில்  70 சதவீதம் பேர் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறோம் என கருத்து தெரிவித்துள்ளனர். 

18.8 சதவீத மக்கள் மட்டுமே அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுவும் மக்கள் இந்த கொரோனாவை தீவிரமாக நினைக்காமல் ஊரடங்கை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக சுற்றி வருவதே காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற  60 சதவீதம் பேர் , "பொறுப்பில்லாதவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுவதாக” தெரிவித்துள்ளனர்.

இந்த கொரோனா பரவலைத் தடுக்க அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் 9.34 சதவீத மக்கள் அரசின் மருத்துவ சிகிச்சைகளில் திருப்தியில்லை. முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளனர். 12.45 சதவீத மக்கள் முறையான பரிசோதனைகள் கையாளப்படுவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story