பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை: மறுஉத்தரவு வரும் வரை பதிவு கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி


பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை: மறுஉத்தரவு வரும் வரை பதிவு கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி
x
தினத்தந்தி 31 July 2020 9:05 AM GMT (Updated: 31 July 2020 9:05 AM GMT)

மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி,

பி.எஸ்.4 ரக வாகனங்களை விட பி.எஸ்.6 ரக வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும் என்றும், பி.எஸ்.6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பி.எஸ்.6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால் மக்கள் பி.எஸ்.6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னர் பி.எஸ்.4 ரக வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வாகன விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும்வரை பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story