குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து தொலைக்காட்சி வாங்கிய பெண்


குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து தொலைக்காட்சி வாங்கிய பெண்
x
தினத்தந்தி 31 July 2020 2:31 PM GMT (Updated: 31 July 2020 2:31 PM GMT)

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் கல்வி கற்பதற்காக தனது தாலியை அடமானம் வைத்து தொலைக்காட்சி வாங்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டதைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரும் இவரது கணவரும் கூழித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களது இரண்டு குழந்தைகளும் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணையதளம் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கஸ்தூரியின் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் அவரது குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று தொலைக்காட்சியில் பாடங்களை படித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து கஸ்தூரி தனது குழந்தைகளுக்காக தொலைக்காட்சி ஒன்றை வாங்க முடிவு செய்து, சிலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக வேலையும், வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் அவருக்கு கடன் கொடுக்க முன்வரவில்லை.

இறுதியாக அவர் தனது தாலியை அடமானம் வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி தாலியை அடமானமாக வைத்து 20,000 ரூபாயை பெற்றுக் கொண்ட கஸ்தூரி, அதில் 14,000 ரூபாய்க்கு புதிய தொலைக்காட்சி ஒன்றை தனது குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். தனது தாயின் இந்த செயல் வருத்தமளிப்பதாக இருந்தாலும், தற்போது கல்வி கற்பதன் மூலம் வருங்காலம் சிறப்பாக அமையும் என்று கஸ்தூரியின் குழந்தைகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவத் தொடங்கியதையடுத்து, இது அந்த மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றது. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊடகத்தின் வாயிலாக இந்த சம்பவம் குறித்த தாங்கள் அறிந்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் தாலியை திரும்பப் பெற மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story