உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேற பள்ளி மாணவனுக்கு பந்தய சைக்கிளை பரிசளித்த ஜனாதிபதி!


உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேற பள்ளி மாணவனுக்கு பந்தய சைக்கிளை பரிசளித்த ஜனாதிபதி!
x

உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேற பள்ளி மாணவனுக்கு பந்தய சைக்கிள் ஜனாதிபதி பரிசளித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் சர்வோதயா பால வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவன் ரியாஸ். இவன், பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவன். அவனுடைய குடும்பத்தினர், அங்கு வசித்து வந்தபோதிலும், ரியாஸ் மட்டும் காசியாபாத்தில் ஒரு வாடகை குடியிருப்பில் தங்கி, டெல்லியில் படித்து வருகிறான்.

அவனுடைய தந்தை சமையல்காரராக சொற்ப வருமானத்தில் க ஷ்டப்படுவதால், படிப்பு நேரம் போக மற்ற நேரத்தில் ஒரு உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்து தந்தைக்கு பணம் அனுப்பி வருகிறான்.

ரியாசுக்கு உலக சைக்கிள் சாம்பியனாக வேண்டும் என்று ஆசை. அதனால், கடுமையாக சைக்கிள் பயிற்சி எடுத்து வருகிறான். கடந்த 2017-ம் ஆண்டு, டெல்லி மாநில சைக்கிள் சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றான். தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் 4-வது இடத்தை பிடித்தான்.

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியாளர் மூலம் ரியாஸ் சைக்கிள் பயிற்சி பெற்று வருகிறான். ஆனால், சொந்தமாக பந்தய சைக்கிள் வாங்க முடியாமல், இரவல் சைக்கிளில் பயிற்சி பெற்று வருகிறான்.

ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் அவனது கதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தெரிய வந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ரியாசுக்கு நேற்று அவர் பந்தய சைக்கிள் பரிசளித்தார். அவன் உலக சாம்பியனாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.


Next Story