ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொள்வாரா?


ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொள்வாரா?
x
தினத்தந்தி 1 Aug 2020 11:28 PM GMT (Updated: 1 Aug 2020 11:28 PM GMT)

அயோத்தியில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.

கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள புண்ணிய தலங்களில் இருந்து மண்ணும், புனித நீரும் கொண்டு வரப்படுகிறது.

பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கட்டிட பணியை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமராக மோடி பதவி ஏற்றபின் அவர் ராமஜென்மபூமிக்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும்.

பூமி பூஜையில் கலந்து கொள்ளும் முன், அவர் அயோத்தியில் உள்ள அனுமார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.

பூமி பூஜையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் இந்து மத துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

பூமி பூஜையில், தான் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக 4-ந் தேதி அயோத்தி செல்வதாகவும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் அறிவித்து உள்ளார். ராமர் கோவில் திறப்பு விழாவை பார்ப்பதுதான் தனது கடைசி ஆசை என்று அவர் கூறி இருக்கிறார்.

இதேபோல் மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி உமாபாரதியும் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் பூமி பூஜையில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெறும் போது பிரார்த்தனை நடத்துமாறு, அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் இந்துக்களை அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்கள் நிர்வாக அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது.

இதுபற்றி கலிபோர்னியாவில் உள்ள சிவதுர்க்கா கோவிலின் நிறுவன தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடைபெறும் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

Next Story