உயர் கல்வியில் படிப்பை பாதியில் விடுவது தவிர்க்கப்படும்; புதிய கல்வி கொள்கை புத்தக சுமையை குறைக்கும்: பிரதமர் மோடி பேச்சு


உயர் கல்வியில் படிப்பை பாதியில் விடுவது தவிர்க்கப்படும்; புதிய கல்வி கொள்கை புத்தக சுமையை குறைக்கும்:  பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 2 Aug 2020 12:33 AM GMT (Updated: 2 Aug 2020 12:33 AM GMT)

புதிய கல்வி கொள்கை மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதோடு, உயர் கல்வியில் படிப்பை பாதியில் விடுவது தவிர்க்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மாறி வரும் தொழில்நுட்பம், சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டும் தேசிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு முடிவு செய்தது.

இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

பின்னர் பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக அந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அது குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்தனர். புதிய கல்வி கொள்கைக்கு கடந்த புதன்கிழமை மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது.

இந்த நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புதிய அடையாளமாகவும், புதிய பொருட்களை கண்டுபிடிப்பதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடத்தப்படும் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ இணையவழி இறுதிப் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் ஏற்பாடு செய்து இருந்தன.

கோவையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பிற நகரங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்ற இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாடினார்.

அப்போது புதிய கல்வி கொள்கை பற்றி அவர் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நமது கல்வி நடைமுறையை நவீனமயமாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த அம்சங்களை கருத்தில் கொண்டே புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் கற்பித்தலில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. வெறும் மனப்பாட அறிவு மட்டுமே மனிதனை உருவாக்கிவிடாது.

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கச் செய்வதோ புதிய கல்வி கொள்கையின் நோக்கம். கற்றலில் எளிமையும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். அதை இந்த கல்வி கொள்கை வழங்கும். தரமான கல்விக்கு புதிய கல்வி கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

21-ம் நூற்றாண்டில் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை, இந்திய மாணவர்களின் எதிர்காலத்துக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும்.

மாணவர்கள் வருங்கால தூண்கள். உயர்கல்வியில் மாணவர்கள் இடைநிற்றலை (படிப்பை பாதியில் நிறுத்துவது) தவிர்க்க புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் இது மாணவர்களின் பாடச்சுமையையும், புத்தக பை சுமையையும் குறைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வேலை தேடாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல்மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதே புதிய கல்வி கொள்கையின் இலக்கு ஆகும். ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக் கும் லட்சியத்தை எட்டுவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

தாய் மொழியின் மூலம்தான் ஒருவருடைய முழு திறமையும் வெளிப்படும். உலகில் வளர்ந்த நாடுகளெல்லாம் தாய் மொழி கல்வி மூலம்தான் ஏற்றம் பெற்று உள்ளன. புதிய கல்வி கொள்கையில் தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

தாய் மொழியுடன் பிற மொழிகளையும் கற்கும் போதுதான் நாடு வளம்பெறும். இந்தியா பல நூறு மொழிகளின் களஞ்சியமாக விளங்குகிறது. அவற்றையெல்லாம் கற்க நம்முடைய வாழ்நாள் போதாது.

மாணவர்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் ஒரு பாடம் மட்டுமே ஒரு மாணவரின் திறமையை தீர்மானித்து விடாது. கற்பது, கேள்வி கேட்பது, தீர்வு காண்பது ஆகிய மூன்றையும் மாணவர்கள் விட்டுவிடக்கூடாது. இன்றைய இளைஞர்களின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

மாணவர்களின் படைப்புகளை நாட்டின் வளர்ச்சிக்கும், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் எடுத்துக் கொள்வோம். புதிய படைப்புகள் உருவாகும் போது, அது அடித்தள மக்களையும் சென்றடைய வேண்டும்.

தற்போதைய கல்வி முறையில் உள்ளதைப் போன்று வெறுமனே மனப்பாடம் செய்வதால் பிரயோஜனம் இல்லை. கூர்மையான அறிவுத்திறனை அதிகரிக்கச் செய்யும் திறனறி முறை கற்றலே மிகவும் சிறந்தது. கற்றலோடு ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்து உள்ளது.

இந்த புதிய கல்வி கொள்கையின் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும். கற்றல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்து இருக்கிறது.

130 கோடி இந்திய மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள புதிய கல்வி கொள்கை, இளம் தலைமுறையினர் தற்சார்புடன் விளங்கவும், இந்தியா உலகின் கல்வி மையமாக விளங்கவும் உதவும் என்று நம்புகிறேன்.

சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றியுடன் கடந்து வருவார்கள். அவர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகிறார்கள். மழைப்பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி கூறியது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல் மறுமுறை பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கின்கள் பெண்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக் கும். இதை உருவாக்கிய மாணவரை பாராட்டுகிறேன்.

சுகாதாரத் துறையில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணப்படவேண்டும். ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதார வசதியை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கலந்துரையாடலின் போது கோவையைச் சேர்ந்த மாணவி கேட்ட கேள்விக்கு அவர், தமிழில் ‘வணக்கம்’ என்று கூறி பதில் அளித்தார்.

Next Story