கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு


கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 2 Aug 2020 8:25 PM GMT (Updated: 2 Aug 2020 8:25 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடு திரும்பினர். மீட்புவிகிதம் 65.44 சதவீதமாக உயர்ந்தது. இறப்புவிகிதம் 2.13 சதவீதமாக குறைந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், அதில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

இந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 51 ஆயிரத்து 225 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 45 ஆயிரத்து 629 ஆக அதிகரித்தது.

குணம் அடைந்தோர் விகிதமும் இதுவரை இல்லாத வகையில் 65.44 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தற்போது நாட்டில் கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 67 ஆயிரத்து 730 ஆக இருக்கிறது. இது மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு (32.43 சதவீதம்) என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், “மத்திய மாநில யூனியன் பிரதேச அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று நிர்வாக உத்தியை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருவதாலும், தன்னலமற்ற தியாக மனப்பாங்குடன் முன்வரிசையில் நின்று பணியாற்றுகிற சுகாதார பணியாளர்களாலும்தான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என தெரிவித்தது.

குணம் அடைவோர் எண்ணிக்கைக்கும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் முறையாக சிகிச்சையில் இருந்தவர்களுக்கும், குணம் அடைந்து வீடு திரும்பியோருக்கும் இடையேயான வித்தியாசம் 1,573 என்ற அளவில் இருந்தது. தற்போது அது 5 லட்சத்து 77 ஆயிரத்து 899 என்ற அளவுக்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற இறப்புவிகிதமும் தொடர்ந்து குறைந்தவண்ணம் உள்ளது. நேற்று இது 2.13 சதவீதமாக குறைந்தது. உலக அளவில் இதை ஒப்பிட்டால் உலகளாவிய சராசரியுடன் இது மிகவும் குறைந்த இறப்பு விகிதங்களில் ஒன்று என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இந்தியாவில் நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை 853 ஆகும். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.

Next Story