குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளை வகுக்க மேலும் 3 மாத அவகாசம் கேட்கிறது, மத்திய உள்துறை அமைச்சகம்


குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளை வகுக்க மேலும் 3 மாத அவகாசம் கேட்கிறது, மத்திய உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 2 Aug 2020 10:18 PM GMT (Updated: 2 Aug 2020 10:18 PM GMT)

குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளை வகுக்க மேலும் 3 மாத அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்து குடியேறிய இந்து உள்ளிட்ட 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்காக, குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த மசோதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே மாதம் 12-ந் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் அமலுக்கு வந்தது.

பொதுவாக, ஒரு சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதங்களுக்குள் அச்சட்டம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உரிய காரணங்களை சொல்லி, 3 மாதங்களுக்கு மிகாமல் கால அவகாசம் கேட்க வேண்டும்.

விதிமுறைகளை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஏற்கனவே கால நீட்டிப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, விதிமுறைகள் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அந்த துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டது.

அதற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஏற்கப்பட வாய்ப்புள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story