தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொற்று உறுதி; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொற்று உறுதி; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Aug 2020 12:29 AM GMT (Updated: 3 Aug 2020 12:29 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக் கும் பரவிய உயிர்க்கொல்லி நோய்க்கிருமியான கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. என்றாலும் நோய்த் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 54 ஆயிரத்து 735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்து 723 ஆக உயர்ந்தது. இதேபோல் நேற்று மேலும் 853 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்தது.

அனைத்து தரப்பு மக்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க் கள். எம்.பி.க்கள், அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கமல் ராணி (வயது 62) என்ற பெண் மந்திரி சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிர் இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா (வயது 55), தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் (80) ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உள்துறை மந்திரி அமித்ஷா. பாரதீய ஜனதா முன்னாள் தலைவரான இவர் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு பெற்று விளங்கும் இவரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். இந்த தகவலை நேற்று அவரே தனது ‘டுவிட்டர்’ பதிவில் வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’பதிவில் கூறி இருப்பதாவது:-

எனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதும், நானாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனது உடல்நிலை நன்றாக உள்ள போதிலும், டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள மேடாண்டா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமித்ஷாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். அவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குள்ளும் நுழைந்துவிட்டது. கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் கவர்னர் மாளிகை மக்கள் தொடர்பு அதிகாரியான கூடுதல் இயக்குனர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர் நோய்த் தொற்று இன்றி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கவர்னர் மாளிகை மருத்துவ அதிகாரியின் ஆலோசனைப்படி, அவர் 7 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 4-வது நாளிலேயே, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை 11 மணி அளவில் அவர் காரில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

அதன்பிறகு மாலையில் அவர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.  பின்னர் காவேரி ஆஸ்பத்திரியின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், “கவர்னருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு மேலும் சில மருத்துவ பரிசோதனைகள் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்டது. கவர்னருக்கு ஏற்பட்டுள்ள தொற்று, லேசானது என்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவரை காவேரி ஆஸ்பத்திரியின் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்கும்” என்று கூறப்பட்டு உள்ளது.

டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

Next Story