ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இல்லை: உமாபாரதி


ராமர் கோவில் பூமி பூஜை   நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இல்லை: உமாபாரதி
x
தினத்தந்தி 3 Aug 2020 3:45 AM GMT (Updated: 3 Aug 2020 3:45 AM GMT)

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமர் கோவில் பூமி பூஜை விழா நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று உமாபாரதி தெரிவித்துள்ளார்.

அயோத்தி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களை தவிர்த்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கடியார் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று உமாபாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து உமா பாரதி கூறுகையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வந்து சென்ற பிறகு,  அயோத்திக்கு செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story