தேசிய செய்திகள்

மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் + "||" + Mumbai: A mother and 3 children were swept away in floods due to heavy rains

மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்

மும்பை:  கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
மும்பையில் கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மும்பை,

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழையால் நகர் எங்கும் வெள்ளக்காடாக மாறியது. கால்வாய் ஓரம் இருந்த வீடு இடிந்து தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

மும்பையில் பருவமழை பெய்து வரும் நிலையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் மும்பையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. மேலும் பலத்த காற்றும் வீசியது.

இந்தநிலையில் நேற்று காலை கடல் அலை சீற்றமும் அதிகரித்தது. ராட்சத அலைகள் சுமார் 4½ மீட்டர் உயரத்துக்கு எழும்பி வந்து கரையை தாக்கின. இதனால் மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல் போனது.

கொட்டி தீர்த்த கனமழை, அலைசீற்றம் காரணமாக நேற்று காலை மும்பையே வெள்ளக்காடானது. சாலைகள் ஆறுகளாக மாறின. தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியதால் அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் பல மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சாலை போக்குவரத்தும் முடங்கியது.

இதனால் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்க வரும் மருத்துவ பணியாளர்கள் கூட ஆஸ்பத்திரிகளுக்கு வந்து சேர முடியாமல் தவித்தனர். அத்தியாவசியமற்ற பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.

சாந்தாகுருசில் உள்ள தோபிகாட் பகுதியில் சாக்கடை கால்வாய் ஓரம் கட்டப்பட்டு இருந்த மாடி வீடு ஒன்று காலை 11.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வீட்டில் வசித்து வந்த 35 வயது பெண் மற்றும் அவரது 1 வயது முதல் 7 வயது வரையிலான 3 குழந்தைகள் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் 2 வயது பெண் குழந்தையை பிணமாக மீட்டனர். தாய், மற்ற 2 குழந்தைகளை மீட்க முடியவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

கோராய் கடற்கரை பகுதியில் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் மாயமாகினர். 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மும்பையில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஒர்லி, மலாடு, மாட்டுங்கா, வாகேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் 30 செ.மீ.க்கும் அதிகமான மழையும், பி.கே.சி., சயான், போரிவிலி, தாதர், அந்தேரி, குர்லா, விக்ரோலி, காட்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் 20 செ.மீ.க்கு அதிகமாகவும் மழை பதிவாகி இருந்தது. நகர்புறத்தில் சராசரியாக 23 செ.மீ. மழையும், புறநகர் பகுதியில் 20 செ.மீ. மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மும்பையை அடுத்த தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. தானே, கோட்பந்தர் ரோட்டில் உள்ள ஒவ்லா பகுதியில் மின்கம்பத்தை தொட்ட நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் இன்றும் (புதன்கிழமை) மும்பையில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.