அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி


அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Aug 2020 8:31 AM GMT (Updated: 5 Aug 2020 8:31 AM GMT)

அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அயோத்தி,


ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.

பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்டு 5-ந்தேதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.  இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Next Story