கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணை: ரூ.890 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது


கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணை: ரூ.890 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது
x
தினத்தந்தி 6 Aug 2020 11:30 PM GMT (Updated: 6 Aug 2020 9:39 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு 22 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-வது தவணையாக ரூ.890 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.

புதுடெல்லி, 

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு விடவில்லை. நேற்று தொடர்ந்து 8-வது நாளாக நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன்காரணமாக நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 64 ஆயிரத்து 536 ஆகி இருக்கிறது.

கொரோனா சவாலை எதிர்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. மேலும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதில் முதல் கட்டமாக ரூ.3,000 கோடி ஏற்கனவே மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டது.

இந்த நிதி, பரிசோதனை வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஆஸ்பத்திரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதற்கும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், பிற பொருட்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.

இந்த நிதியை பெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதன் ஒரு பகுதியை பயன்படுத்தி 5 லட்சத்து 80 ஆயிரத்து 342 தனிமை படுக்கைகள், 1 லட்சத்து 36 ஆயிரத்து 88 ஆக்சிஜன் ஆதரவு படுக்கைகள், 31 ஆயிரத்து 255 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுடன் ஆஸ்பத்திரி கட்டமைப்பை பலப்படுத்தின.

மேலும் 86 லட்சத்து 88 ஆயிரத்து 357 பரிசோதனை கருவிகளும், 79 லட்சத்து 88 ஆயிரத்து 366 வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியாவும் வாங்கப்பட்டன. மேலும் 96 ஆயிரத்து 557 பேர் பணியில் சேர்க்கப்பட்டு மனித வளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 6 லட்சத்து 65 ஆயிரத்து 799 பேருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 821 பணியாளர்களுக்கு வாகன வசதியும் செய்து தர பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 22 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-வது தவணையாக ரூ.890 கோடியே 32 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இந்த நிதி அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார அமைப்பு ஆயத்த நிலை தொகுப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, மாநிலங்களில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் அளவின் அடிப்படையில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

2-வது தவணை நிதியை பெறுகிற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம், சத்தீஷ்கார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, கோவா, குஜராத், கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த 2-வது தவணை நிதியைப் பெறுகிற மாநிலங்கள், கொரோனா பரிசோதனைக்கான பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். மேலும், ஆர்டிபிசிஆர் எந்திரங்களை கொள்முதல் செய்து நிறுவுவது, ஆர்.என்.ஏ. பிரித்தெடுப்பு கருவிகள், டூருநாட், சிபிநாட் எந்திரங்கள் வாங்குவது, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை ஏற்படுத்தி சிகிச்சைகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை ஏற்படுத்துவது, படுக்கையோர ஆக்சிஜன் செறிவு கருவிகளை வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஆஷா தொழிலாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் போன்றோருக்கு பயிற்சி தரவும், திறன் மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவைப்படும் இடங்களில் கொரோனா தளங்களில் பதிவு செய்த தன்னார்வலர்களை கொரோனா வைரஸ் தடுப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

Next Story