விமான விபத்து; மத்திய வெளிவிவகார இணை மந்திரி கேரளா வருகை


விமான விபத்து; மத்திய வெளிவிவகார இணை மந்திரி கேரளா வருகை
x
தினத்தந்தி 8 Aug 2020 1:44 AM GMT (Updated: 8 Aug 2020 1:44 AM GMT)

கோழிக்கோடு விமான விபத்தினை அடுத்து மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன் கேரளா வருகை தந்துள்ளார்.

கோழிக்கோடு,

கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால், ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

அவர்கள், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விமானி அறையில் இருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

இதுபற்றி அறிந்ததும், பிரதமர் மோடி தொலைபேசி வழியே முதல் மந்திரி பினராயி விஜயனை தொடர்பு கொண்டு விபத்து பற்றிய விவரங்களை கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, மத்திய வெளிவிவகார இணை மந்திரி வி. முரளீதரன் கேரளா வருகை தந்துள்ளார்.  அவர் விமான நிலையத்தில் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின்னர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.  இதன்பின் அவர், கேரள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.

Next Story