மசூதி நிலத்தில் நடைபெறும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம்- சன்னி வக்பு வாரியம் தகவல்


மசூதி நிலத்தில் நடைபெறும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம்- சன்னி வக்பு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2020 12:08 AM GMT (Updated: 9 Aug 2020 12:08 AM GMT)

மசூதி நிலத்தில் நடைபெறும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

லக்னோ,

அயோத்தி தண்ணிபூரில் மசூதி கட்டுவதற்கு அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் மசூதியுடன் மருத்துவமனை, நூலகம், சமூக சமையலறை, ஆய்வு மையம் உள்ளிட்ட பொதுச்சேவை வசதிகளை அமைக்க சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக அறக்கட்டளை ஒன்றும் நிறுவப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வராது எனவும், தான் ஒரு இந்து மற்றும் யோகி என்பதால் அதில் பங்கேற்க முடியாது என்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

ஆனால் மசூதி நிலத்தில் நடைபெறும் பொதுச்சேவை வசதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என அறக்கட்டளை கூறியுள்ளது.

இது தொடர்பாக அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் அதர் உசேன் கூறுகையில், ‘தண்ணிபூரில் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில் ஆஸ்பத்திரி, நூலகம், சமூக சமையலறை போன்றவை கட்டப்படும். இது பொதுமக்களுக்கானது. இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுப்போம். அவர் இந்த விழாவின் பங்கேற்பாளர் மட்டுமல்ல, இவற்றின் கட்டுமானங்களுக்கும் அவர் உதவுவார். இஸ்லாம் விதிமுறைப்படி மசூதிக்காக, அடிக்கல் நாட்டப்படும் நிகழ்வு இல்லை’ என்று தெரிவித்தார்.

Next Story