நாட்டில் கடந்த 6 நாட்களில் 3 லட்சம் அதிகரித்த கொரோனா பாதிப்பு; அதிர்ச்சி தகவல்


நாட்டில் கடந்த 6 நாட்களில் 3 லட்சம் அதிகரித்த கொரோனா பாதிப்பு; அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2020 5:59 AM GMT (Updated: 9 Aug 2020 5:59 AM GMT)

இந்தியாவில் கடந்த 3ந்தேதி முதல் இன்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய நாடு முழுவதுமுள்ள 940 அரசு மையங்கள் மற்றும் 462 தனியார் மையங்கள் உள்பட 1,402 பரிசோதனை மையங்கள் தீவிர செயலாற்றி வருகின்றன.  இவற்றில் 713 மையங்கள் ரேபிட் டெஸ்ட் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில் மராட்டியம் அதிக அளவாக 4,90,262 பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  எனினும் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 906 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதேபோன்று தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,85,025 ஆக உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 6,488 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து கர்நாடகா (2,618), பீகார் (2,565), ஆந்திர பிரதேசம் (2,488), தெலுங்கானா (1,151) ஆகியவை ஒரு நாளில் அதிக பாதிப்புகளை கொண்டவையாக உள்ளன.

நாட்டில் கடந்த 3ந்தேதி கொரோனா பாதிப்புகள் 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் 19 லட்சம் என்ற அளவை கடந்தது.  இதனை தொடர்ந்து, கடந்த 7ந்தேதி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 20 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 64,399 பாதிப்புகள் உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 21 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.  இதனால் கடந்த 6 நாட்களில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Next Story