காஷ்மீரில் ராணுவம் அதிரடி: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீரில் ராணுவம் அதிரடி: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2020 7:45 PM GMT (Updated: 9 Aug 2020 7:28 PM GMT)

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு, 

காஷ்மீர் எல்லைக்குள் பயங்கரவாதிகள் அடிக்கடி புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா ஹாதி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர்.

அப்போது தடுக்க முயன்ற இந்திய வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சிறிதுநேரம் நீடித்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இறந்த பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர் வைத்திருந்த உணவுப்பொருட்களில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன. எனவே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது இதன்மூலம் தெரிய வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story