சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 10 Aug 2020 12:00 AM GMT (Updated: 9 Aug 2020 7:55 PM GMT)

சென்னையையும், போர்ட்பிளேரையும் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி, 

சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த கேபிள், சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது.

இதன்மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப்போன்று செல்போன், லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும்.

இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018-ம் ஆண்டு, டிசம்பர் 30-ந் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்மூலம், சென்னை-போர்ட்பிளேர் இடையே நம்பகமான, வலுவான, அதிவேக தொலைத்தொடர்பு, பிராட்பேண்ட் இணையதள சேவை வசதிகள் கிடைக்கும். இது அந்தமான் தீவுகளில் சுற்றுலா, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகமாய் அமையும். வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். தொலை மருத்துவம், தொலை கல்வி போன்ற மின்ஆளுமை சேவைகளை வழங்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களும் பயன் அடையும்.

இன்று (திங்கட்கிழமை) இந்த திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி அந்தமான் பாரதீய ஜனதா தொண்டர்களுடன் காணொலி காட்சி வழியாக அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தமான் தீவுகள் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளன. இது ஒரு உலகளாவிய வர்த்தகத்துக்கான முக்கிய மையம்.

இதை ஒரு நீல பொருளாதார மையமாகவும், கடல்சார் புதிய தொழில் நிறுவன மையமாக மாற்றவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கடல்சார் கரிம மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு, அந்தமான், நிக்கோபாரின் 12 தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பிராந்தியம், அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்திலும், புதிய இந்தியாவின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

சென்னை-போர்ட்பிளேர் நீர்மூழ்கி கண்ணாடி இழை திட்டமானது. இந்த பிராந்தியம், புற உலகுடன் ஆன்லைனில் தொடர்பு கொள்வதில் பிரச்சினை ஏற்படாது என்பதை உறுதி செய்யும்.

இந்த பிராந்தியத்தில் 300 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை பணிகள், சாதனை அளவான நேரத்தில் அமைத்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story