திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி


திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2020 7:36 AM GMT (Updated: 10 Aug 2020 7:36 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருமலை,

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த சூழலில் கடந்த மார்ச் 19ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.  அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது.  பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எனினும், கோவிலில் சுவாமிக்கு தினமும் நடைபெறும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெற்றன.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 120 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர், நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்தது.  ஏறக்குறைய இரண்டரை மாதங்களாக மூடியிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 11ந்தேதி மீண்டும் சாமி தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.  இதன்படி, 83 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், கோவிலில் அர்ச்சகர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  அவர்கள் சிகிச்சை பெற்ற நிலையில், தொற்று பலருக்கும் பரவ தொடங்கியது.  இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் சிலர் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  402 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.  338 பேர் பல்வேறு நல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று கோவிலின் உண்டியலை நிரப்புவதற்காக கோவில் திறக்கப்பட்டு உள்ளது என சில ஊடகங்களில் வந்துள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள சிங்கால், பக்தர்கள் கேட்டு கொண்டதற்காகவே கோவில் திறக்கப்பட்டது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றியே தரிசன அனுமதி வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.

Next Story