நிலச்சரிவு, விமான விபத்து: தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி - பினராயி விஜயன்


நிலச்சரிவு, விமான விபத்து: தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 10 Aug 2020 3:39 PM GMT (Updated: 10 Aug 2020 3:39 PM GMT)

கேரளத்தில் வெள்ள பாதிப்பு, விமான விபத்து, பணிகளை மேற்கொள்வதற்காக தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் தொடர் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. இதனால் குடியிருப்பு அருகே உள்ள கல்லார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 300 அடி உயரம் கொண்ட பெட்டிமுடி மலையில், 150 அடி சரிந்து ராட்சத பாறைகள் உருண்டன, மணலும் சரிந்தன. அதிகாலை நேரத்தில் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேரும் மணலுக்குள் புதைந்து விட்டனர். இதில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 7-ந்தேதி முதல் மீட்பு பணி தொடங்கியது.

இந்த பணியில் தீயணைப்பு படையை சேர்ந்த 120 பேர், தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 85 பேர், சுகாதாரத்துறையினர் 100 பேர், வனத்துறையினர் 50 பேர், 200 போலீஸ்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 7-ந்தேதி 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடுக்கி நிலச்சரிவில் 22 பேரை காணவில்லை. வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், கோழிக்கோடு விமான விபத்திலும் தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story