ராஜஸ்தான் காங். உள்கட்சி பூசலில் ‘திடீர்’ சமரசம்: முதல்-மந்திரி மாற்றப்படுவாரா?


ராஜஸ்தான் காங். உள்கட்சி பூசலில் ‘திடீர்’ சமரசம்: முதல்-மந்திரி மாற்றப்படுவாரா?
x
தினத்தந்தி 10 Aug 2020 10:15 PM GMT (Updated: 10 Aug 2020 8:36 PM GMT)

ராஜஸ்தான் காங்கிரஸ் உள்கட்சி பூசலில் சமரசம் உருவாகி உள்ளது. ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் சந்தித்து பேசினார். முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்பது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

ராஜஸ்தான் காங்கிரஸ் உள்கட்சி பூசலில் சமரசம் உருவாகி உள்ளது. ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் சந்தித்து பேசினார். முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்பது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

ராஜஸ்தானில், முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் இருந்தார்.

அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜனதா ஆட்சி நடக்கும் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டார். அவர் பா.ஜனதாவில் சேருவார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் அதை மறுத்தார்.

சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன.


சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் சி.பி.ஜோ‌ஷி, தகுதி நீக்க நடவடிக்கைக்கான நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து 19 பேரும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை ஏற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு தடை விதித்தது.

இதற்கிடையே, சச்சின் பைலட்டை மீண்டும் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால், அதை ஏற்பதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். இதையடுத்து, திரைமறைவில் சமரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ராஜஸ்தான் சட்டசபை, வருகிற 14-ந் தேதி கூடுகிறது.


இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதை சச்சின் பைலட் மறுக்கவில்லை.

நேற்று பிற்பகலில், ராகுல்காந்தியை சச்சின் பைலட் சந்தித்தார். டெல்லியில் உள்ள ராகுல் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. அப்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் மூலம் நல்ல முடிவை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. மேலிடத்துடன் சச்சின் பைலட் தொடர்பில் இருந்து வருவதாகவும், அவர் திரும்ப வருவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


இதற்கிடையே, சச்சின் பைலட் திரும்பி வருவதால், முதல்-மந்திரி அசோக் கெலாட் மாற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த்சிங் டோடஸ்ரா கூறியதாவது:-

முதல்-மந்திரி மாற்றப்பட வாய்ப்பு இல்லை. அதுபற்றி விவாதிக்கப்படவும் இல்லை. அது வெறும் வதந்தி. அசோக் கெலாட், முதல்-மந்திரியாக இருக்கிறார். அவரே 5 ஆண்டுகளும் நீடிப்பார்.

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு கதவு திறந்துதான் இருக்கிறது. நாங்கள் அவர்களை விரட்டவில்லை. அவர்களாகத்தான் சென்றனர். அவர்கள் கட்சிக்கு திரும்புவது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். அதுபற்றி மாநில காங்கிரஸ் விவாதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

14-ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து சபாநாயகர் சி.பி.ஜோ‌ஷியுடன் கோவிந்த்சிங் டோடஸ்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.


Next Story