இந்தியாவில் 4 நாட்களுக்கு பின் குறைந்த பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா


இந்தியாவில் 4 நாட்களுக்கு பின் குறைந்த பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Aug 2020 4:25 AM GMT (Updated: 11 Aug 2020 4:44 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கடந்த 7ந்தேதி ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருந்தன.  கடந்த 8ந்தேதி இந்த எண்ணிக்கை 61,537 ஆக இருந்தது.  கடந்த 9ந்தேதி 64,399 பேரும், நேற்று 62,064 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு குறைவாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  இதுபற்றி, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 490 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 871 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 44,386ல் இருந்து 45,257 ஆக உயர்வடைந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கு மேல் உறுதியான நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 53 ஆயிரம் என்ற அளவில் குறைந்து உள்ளது.  இதேபோன்று பலி எண்ணிக்கை நேற்றுடன் (1,007 பேர்) ஒப்பிடும்பொழுது இன்று குறைந்து உள்ளது.

Next Story