கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு


கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Aug 2020 6:42 AM GMT (Updated: 11 Aug 2020 6:42 AM GMT)

கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

இடுக்கி,

கேரளாவில் கடந்த ஜூன் 1ந்தேதி பருவமழை தொடங்கி பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், பல்வேறு நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ந்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.  தொடர்ந்து ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.  இதில், ராஜமலை பகுதியில் கனமழையால் கடந்த வெள்ளி கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.

இந்த சம்பவத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.  தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வந்தது.  இந்நிலையில், சம்பவ பகுதியில் இருந்து இன்று ஒருவரது உடல் மீட்கப்பட்டது.  இதனால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது என இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story