முகநூலில் பதிவிட்ட கருத்தால் பயங்கர வன்முறை: பெங்களூருவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி


முகநூலில் பதிவிட்ட கருத்தால் பயங்கர வன்முறை: பெங்களூருவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2020 10:30 PM GMT (Updated: 12 Aug 2020 8:46 PM GMT)

முகநூலில் பதிவிட்ட கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை நடந்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர்.

பெங்களூரு, 

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தி. இவரது அக்காள் மகன் நவீன். இவர், நேற்று முன்தினம் மாலையில் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது. இதற்கு சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ.வின் வீடு மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். அவரது வீட்டுக்கும் மர்மநபர்கள் தீவைத்தனர்.

வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. மேலும் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கானோர் முகநூலில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸ் வாகனங்களுக்கும், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. இரும்பு கம்பிகள், அரிவாள் போன்ற ஆயுதங்களாலும் வன்முறையாளர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார்கள். இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் வன்முறையாளர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

மாறாக போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். போலீஸ் நிலையத்திற்கும் தீவைக்க முயன்றனர். இந்த நிலையில், வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் வன்முறையாளர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதில் 3 வாலிபர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள். மேலும் பலர் குண்டுகாயம் அடைந்தனர்.



வன்முறையில் ஈடுபட்டவர்கள் நடத்திய தாக்குதலில் 2 துணை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 78 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், வன்முறை நடந்த பகுதியில் நேற்று காலையில் இருந்து அமைதி திரும்பியது. பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வன்முறைக்கு காரணமான எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வன்முறைக்கு மூலக்காரணமாக இருந்த அகண்ட சீனிவாசமூர்த்தியின் மருமகனான நவீனையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்து போய் விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த வன்முறை சம்பவத்துக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே யோகி ஆதித்யநாத் பாணியில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு தேஜஸ்வி சூர்யா எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

இந்தநிலையில் வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Next Story