கேரளாவில் கொரோனா நோயாளிகளின் சி.டி.ஆர். விவரங்களை பெற போலீசாருக்கு அனுமதி; காங்கிரஸ் எதிர்ப்பு


கேரளாவில் கொரோனா நோயாளிகளின் சி.டி.ஆர். விவரங்களை பெற போலீசாருக்கு அனுமதி; காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 1:11 PM GMT (Updated: 13 Aug 2020 1:11 PM GMT)

கேரளாவில் கொரோனா நோயாளிகளின் சி.டி.ஆர். (தொலைபேசி அழைப்பு பதிவு) விவரங்களை பெற போலீசாருக்கு அனுமதி வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  பாதிப்பு எண்ணிக்கை நேற்றுவரை 38,144 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், கேரளாவில் கொரோனா நோயாளிகளின் சி.டி.ஆர். (தொலைபேசி அழைப்பு பதிவு) விவரங்களை பெற போலீசாருக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை புதிய மற்றும் அறிவியல் முறையில் கண்டறிவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.  இந்த விவரங்களை வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது.  அதனால் நோயாளிகளின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடுவது ஆகாது என்றும் அவர் கூறினார்.  அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பின.  இதற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஒரு நபரின் தொலைபேசி அழைப்பு பதிவு விவரங்களை போலீசார் சேகரிப்பது என்பது தனிநபரின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடுவது ஆகும்.

இது, கே.எஸ். புட்டசாமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையாகும்.  இதற்கு எதிராக எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்.  உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும்.

கேரளாவை போலீஸ் மாநிலம் ஆக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.  கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்களே முன்னணியில் இருந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story