பீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு


பீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 4:42 PM GMT (Updated: 13 Aug 2020 4:42 PM GMT)

பீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பாகல்பூர்,

பீகாரில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  465 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இங்குள்ள பாகல்பூர் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கு ஆயுதமேந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முககவசம் அணியாமல், முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் வருகின்ற நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி மருத்துவர் குமார் கவுரவ் கூறும்பொழுது, நாங்கள் அவர்களை தடுத்து நிறுத்தினால், அவர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.  வீட்டில் சமைத்த உணவுகளை கொண்டு வந்து கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள்.  சிலர் நோயாளிகளுக்கு மசாஜ் செய்ய கூட விரும்புகின்றனர்.

அவர்கள் ஐ.சி.யூ.வில் இருந்து போகும்பொழுது, சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு தொற்றை கொண்டு சென்று சேர்க்கின்றனர்.

ஒருமுறை ஐ.சி.யூ.வில் இருந்த நோயாளி ஒருவரின் மனைவியை இங்கிருந்து செல்லும்படி கூறினேன்.  உடனே, அவர் கேட்டு கொண்டு வெளியேறினார்.  ஆனால் சில நிமிடங்களில் மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே வந்து விட்டார் என கூறுகிறார்.

இந்த மருத்துவமனையில் அவருடன் பணிபுரிந்தவர்களில் சிலர் கொரோனா பாதிப்புகளாலும், சிலர் பணிபுரிய மறுப்பு தெரிவித்து விட்ட சூழலிலும், கவுரவ் தலைமை பொறுப்பினை ஏற்று கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதனால், பாகல்பூர் மக்கள் மற்றும் அருகேயுள்ள மாவட்ட மக்களுக்காக இந்த பொறுப்பினை நான் ஏற்று கொண்டேன் என அவர் கூறியுள்ளார்.

Next Story