தேசிய செய்திகள்

பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு + "||" + No placement of idols in public places: Prohibition of Ganesha procession - Government of Tamil Nadu order

பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு
கொரோனா பரவலை தொடர்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். பின்னர் அந்த சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பார்கள்.

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஆயிரக்கணக் கான சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

கொரோனா பரவல் காரண மாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.

எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், கோவில் நிர்வாகமும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.