பரபரப்பு திருப்பங்களுக்கு மத்தியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடுகிறது


பரபரப்பு திருப்பங்களுக்கு மத்தியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 14 Aug 2020 4:15 AM GMT (Updated: 14 Aug 2020 4:15 AM GMT)

ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று அம்மாநில சட்டபேரவை கூடுகிறது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று அம்மாநில சட்டபேரவை கூடுகிறது.  காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உத்தேசித்துள்ளது.  சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளதால், அசோக் கெலாட் அரசுக்கு பெரும்பான்மை காட்டுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தெரிகிறது.

ராஜஸ்தான் அரசியலில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன?

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் மாநில காங்கிரஸ் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். மேலும் சச்சின் பைலட்டுக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டதுடன், மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக தனித்தனி ஓட்டலில் தங்கி இருந்தனர்.

அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கு கோரி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு இருந்தார். இதில் மாநில அரசு தப்புமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருந்தது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிருப்தியாளரான சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தனர். கட்சியில் அவரது குறைகளை தீர்ப்பதற்காக சிறப்புக்குழு அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் அவர் சமரசம் ஆகி சுமார் ஒரு மாதத்துக்குப்பின் ராஜஸ்தான் திரும்பினார்.

இதனால் ராஜஸ்தான் அரசுக்கு நிலவிய நெருக்கடி நீங்கி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சச்சின் பைலட் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டுக்கு நேரில் சென்றார். அவரை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார். இருவரும் பகையை மறந்து கைகுலுக்கிக்கொண்டனர்.

அப்போது உடனிருந்த கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், அவினாஷ் பாண்டே, ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், கோவிந்த் சிங் தோதசரா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் ராஜஸ்தான் அரசில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக அசோக் கெலாட் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நடந்தது. இதில் இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது, சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது, மாநில அரசை கவிழ்க்க முயன்ற புகாரை பா.ஜனதாவுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடந்து அரசு தோற்றிருக்கிறது. இவை அனைத்தையும் அந்த தீர்மானத்தில் நாங்கள் குறிப்பிடுவோம்’ என்று கூறினார். காங்கிரசில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டாலும், இன்னும் அந்த கட்சி சிறப்பாக இல்லை என்று கூறிய அவர், ஒருவர் கிழக்கே போனால் மற்றொருவர் மேற்கே போகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.


Next Story