சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றினார்


சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில்  பிரதமர் தேசியக் கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2020 2:05 AM GMT (Updated: 15 Aug 2020 2:32 AM GMT)

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.

புதுடெல்லி, 

இந்திய சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது.   

செங்கோட்டைக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வந்த பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு செயலர் அஜய்குமார் வரவேற்றனர். முப்படைகள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.,

7-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றும் பிரதமர் மோடி, வழக்கம் போல தலைப்பாகை அணிந்தபடி  சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது. 

விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தேசிய மாணவர் படையினர் கலந்து  கொண்டனர்.  விழாவில் பங்கேற்ற மிக மிக முக்கிய பிரமுகர்களும் சமூக இடைவெளி விட்டு  அமர்ந்திருந்தனர்.  விழாவில் கலந்து  கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து  வந்திருந்தனர். கையை சுத்தப்படுத்திக் கொள்ள விழா நடைபெறும் பகுதியில் ஆங்காங்கே கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது.  


Next Story