‘பேஸ்புக்’ தலைமை செயல் அதிகாரிக்கு காங்கிரஸ் கடிதம்


‘பேஸ்புக்’ தலைமை செயல் அதிகாரிக்கு காங்கிரஸ் கடிதம்
x
தினத்தந்தி 19 Aug 2020 1:48 AM GMT (Updated: 19 Aug 2020 1:48 AM GMT)

இந்தியாவில் ‘பேஸ்புக்’ பாரபட்சமாக செயல்படுவதாகவும், எனவே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதீய ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க பேஸ்புக் வலைத்தள நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருப்பதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே நேற்று முன்தினம் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் பேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், அமெரிக்க பத்திரிகை கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளும் கூறி உள்ளன.

ஆனால் இந்த குற்றசாட்டை மறுத்த பேஸ்புக் நிறுவனம், வன்முறையை தூண்டும் வெறுப்பு பேச்சுகளை பேஸ்புக்கில் தடை செய்து இருப்பதாகவும், எந்த கட்சியின் நலனுக்காகவோ அல்லது அரசியல் சார்ந்தோ செயல்படவில்லை என்றும் கூறியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு, பாரபட்சமானதாகவும் நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகவும் அமைந்து உள்ளது. இந்த பிரச்சினையை காங்கிரஸ் மட்டுமின்றி வேறு சில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கிளப்பி உள்ளன.

எனவே பேஸ்புக் தலைமையகம் இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை குழு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை ஓரிரு மாதங்களுக்குள் பேஸ்புக் நிர்வாக குழுவிடம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும். மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடவேண்டும்.

இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தை வழிநடத்த புதிய தலைமையை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story