எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது - மகன் அபிஜித் முகர்ஜி


எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது - மகன் அபிஜித் முகர்ஜி
x
தினத்தந்தி 19 Aug 2020 3:59 AM GMT (Updated: 19 Aug 2020 3:59 AM GMT)

தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் நிலையாக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “உங்கள் அனைத்து நல்வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் தீவிரமான முயற்சியிலும், என் தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய அளவுருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் கவனிக்கப்பட்டு வருகின்றன! அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story